கடலூர்: சிதம்பரம் நகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றில், நலன்புதூர் என்ற இடத்திலிருந்து சிதம்பரம் நகருக்கு ரூ. 7 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீரை கொண்டுவருவது இத்திட்டமாகும்.
இந்தத் திட்டம் முடிவுற்ற நிலையில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் விசாரணை
குறிப்பாக குடிநீருக்கான குழாய்கள் புதைத்ததில் முறைகேடு, தரமற்ற குழாய்களை புதைத்தது, குறைந்த அளவில் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதிக எண்ணிக்கையை காண்பித்தது எனப் பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 2018ஆம் ஆண்டு கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் குடிநீர் குழாய்கள் புதைத்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஐந்து பேர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சில ஆண்டாக இருந்த இந்த வழக்கு, தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா மெல்வின்சிங் தலைமையில் இன்று (ஆக. 04) சிறப்புக் குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் 15 பகுதிகளில் விசாரணை
ஏற்கெனவே இரண்டு முறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் சிதம்பரம் நகரின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ள பைப்புகளை தோண்டி எடுத்து பார்த்தனர். நளம்புத்தூர் கிராமத்திலிருந்து சிதம்பரம் நகருக்கு குடிநீர்வரும் பைப்புகள் உள்ள இடம், நாராயணன் நகரிலுள்ள புதைக்கப்பட்ட குழாய்கள் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்பு காவலர்கள், அலுவலர்கள் சிதம்பரம் நகர்ப்பகுதிகளான வாகிசு நகர், நடராஜா கார்டன் உள்ளிட்ட 15 பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் தாயாரிடம் விசாரணை'