கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா. இவர் கருவுற்று நான்கு மாதம் ஆன நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதை மறைத்து தான் கர்ப்பமாக இருப்பதாக தொடர்ந்து நாடகமாடி வந்த நர்மதாவுக்கு வளையகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களுக்கு முன் நர்மதா தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன் பாக்கியலட்சுமி தம்பதியின் பெண் குழந்தையை நர்மதா அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார். பின்னர் புதுவை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அக்குழந்தையை அனுமதித்துள்ளார்.
இதனிடையே, தனது குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நர்மதா தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அனைவரும் புதுவை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளார். இதைக்கேட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்து குழந்தைக்கு வேண்டிய புது துணி வாங்கிக்கொண்டு புதுவை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது, பெண்குழந்தை கடத்தல் வழக்கில் நர்மதாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணையில் தனக்கு கருகலைந்ததை மறைத்து நாடகமாடியது தெரிந்துவிடுமோ என்று அச்சத்தில் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நர்மதாவை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:குமரியில் சிக்கிய குழந்தைக் கடத்தல் கும்பல்!