இதுவரை இவ்வுலகம் கண்டிராத புதிய வகை வைரசான கரோனா சுனாமியாக மாறி உயிர்களைக் காவு வாங்கிவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு நாடும் விழிப்புடன் செயலாற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் சமூக இடைவெளியைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நமது நாட்டிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. கல்லூரிகள், பள்ளிகள் இயங்கவில்லை. பல கல்லூரிகளில் கடைசி ஆண்டு மாணாக்கர் புராஜெக்ட் எனப்படும் திட்ட செயல்முறையைக் காணொலி கலந்தாய்வு மூலமாக விரிவுரையாளர், பேராசிரியர்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.
கடலூரில் தேர்வுக்குத் தயாராகும் 10ஆம் வகுப்பு மாணாக்கருக்கு எப்படியாவது பாடம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய முறையைக் கையாண்டு அதனைத் தற்போது செயல்படுத்தி வருகிறது தனியார் பள்ளி ஒன்று.
தனியார் பள்ளியின் காணொலி வகுப்பு
கரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்றின் பீதி தொடங்கியது முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வீட்டில் உள்ள மாணாக்கர் பாடம் கற்கும் விதமாக கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாட்ஸ்அப் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றது. வீட்டில் உள்ள மாணாக்கருக்கு எளிதில் புரியும்படி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பாடத்தை நடத்தி அதனை வாட்ஸ்அப் மூலமாக அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.