கடலூர்:திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் சரக்கு வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவிற்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் அந்த விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பாஸ்கரனின் உறவினர் அஜய் என்பவர் இது சம்பந்தமாக மூன்று பேரை தட்டிக் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று (செப்.3) அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அஜய்-யின் உறவினர்கள் பாஸ்கரன் மற்றும் மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 நபர்களை சுத்தியல், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாஸ்கரன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் சிவகுரு மற்றும் திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.