தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பர சர்ச்சைக்கு காரணம் என்ன? கனகசபை தரிசனம் பிரச்னை ஆனது ஏன்? - minister sekarbabu

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தில்லை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

nataraja temple
சிதம்பரம் கோயில்

By

Published : Jun 28, 2023, 7:54 PM IST

Updated : Jun 29, 2023, 5:08 PM IST

சிதம்பர சர்ச்சைக்கு காரணம் என்ன? கனகசபை தரிசனம் பிரச்னை ஆனது ஏன்?

சிதம்பரம்(கடலூர்):சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனால் ஜூன் 24 முதல் 28 வரை, 4 நாட்களுக்கு சந்நிதிக்கு முன்னால் உள்ள கனகசபையில் பக்தர்கள் யாரும் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை பொது தீட்சிதர்களால் வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பலகையை அகற்றச் சென்றனர். அவர்களை முற்றுகையிட்டு தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று (27.06.2023) போலீசார் முன்னிலையில் கனகசபை திறக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

கனக சபைக்காக அரசாணை:நடராஜர் கோயிலுக்கு தனி அலுவலர் இல்லாத காரணத்தினால் தில்லைக்காளி கோயில்,செயல் அலுவலர் சரண்யா மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கனகசபையில் பக்தர்கள் ஏற கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டதால்,அனைத்து பக்தர்களுக்கும் கனகசபையில் ஏற உரிமை உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை தீட்சிதர்கள் தற்போது மீறியதால் அறநிலையத்துறை தலையிட நேரிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தீட்சிதர்கள் மீது வழக்கு: போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றபோது அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்,அதிகாரிகள் தங்களை தாக்கிவிட்டு கோயிலுக்குள் நுழைந்ததாக தீட்சிதர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

களமிறங்கிய பெண் அதிகாரிகள்: குறிப்பாக இந்த நடவடிக்கைக்காக அறநிலையத்துறை சார்பிலும் பெண் அதிகாரியான சரண்யா களமிறக்கப்பட்டார். இதே போன்று காவல்துறை தரப்பிலும் பெண் போலீஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டு கோயிலினுள் நுழைந்தனர். இதனால் ஆவேசமாக எதிர்வினையாற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும், இம்முறை ஒரு தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சிதம்பரம் கோயிலை நிர்வகிப்பது யார்?: சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொதுவாகவே கேயில்களின் நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், தில்லை நடராஜர் கோயில் இந்த பட்டியலில் இல்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்தே,இக்கோயிலை தமிழ்நாடு அரசு நிர்வகிப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள தங்கத்தாலான கூரை வேயப்பட்ட மேடை கனகசபை என்றழைக்கப்படுகிறது.

கோயிலை கைப்பற்ற அரசாணை: பின்னர் 2008ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, 2008ம் ஆண்டில் தில்லை நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமாகவும், உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் கோயில் தொடரலாம் எனவும் தீர்ப்பு வந்தது. ஆனால் கோயிலில் முறைகேடு குறித்து புகார்கள் வந்தால், அறநிலையத்துறை தலையிட்டு பரிந்துரைகள் வழங்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.

தற்போதைய சூழலில் கோயிலை மீண்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. சென்னையில் இன்று (28.06.2023) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தெய்வம் எப்படி பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்காதோ அது போன்று, தீட்சிதர்களும் தீங்கு விளைவிக்கக் கூடாது. ஆனால் எவையெல்லாம் சட்ட விரோதமோ,அதையெல்லாம் ஒரு சில தீட்சிதர்கள் கையில் எடுத்து செய்கின்றனர். ஏற்கெனவே நகை சரிபார்ப்பு பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்தனர்.

பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். அதனைத்தான் நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றார். மேலும், 'சிதம்பரம் கோயிலைப் பொறுத்தவரை பக்தர்களின் நலனுக்கான நடவடிக்கைகளிலிருந்து எந்த நாளும் பின்வாங்கப்போவதில்லை' எனவும், பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

இதனிடையே சிதம்பரம் சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் நான் பக்தையாக சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது கூட பூஜைகள் நடக்கிறது என்று சொல்லி சுவாமி தரிசனம் செய்வதில் சில பிரச்னைகள் இருந்தது. அரசும் தீட்சிதர்களும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நடராஜர் அனைவருக்கும் பொதுவானவர். அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு! ஒருமித்த கருத்தை உருவாக்க அறிவுறுத்தல்!

Last Updated : Jun 29, 2023, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details