கடலூர் மாவட்டம், நெய்வேலியில் சஹானா சிக்கன் என்ற கோழிக்கறி கடை உள்ளது. இங்கு சிக்கன் வாங்கி சாப்பிட்ட பாண்டி என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்; அதனால் அவருக்கு கரோனா வைரஸ் தொற்றால் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று வைரலாகப் பரவியது.
இந்த வாட்ஸ்அப் தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனால் சஹானா சிக்கன் கடை பக்கம் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. இந்தத் தகவல் திரும்பத் திரும்ப வாட்ஸ்அப்பில் வைரலாக வலம் வந்தபடியே இருந்தது. கடையின் வியாபாரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் பக்ருதீன் அலி முகம்மது, நெய்வேலி தேர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், ' கடந்த 20 ஆண்டுகளாக நெய்வேலி சூப்பர் பஜாரில் சிக்கன் கடை நடத்தி வருகிறேன். எனது கடைக்கு நெய்வேலியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அடிக்கடி சிக்கன் வாங்கிக்கொண்டு பணம் தராமல் தகராறு செய்து வந்தார். நான் கடன் தராததால், என் கடை மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக, வாட்ஸ்அப் மூலம் இப்படி ஒரு பொய்யான வதந்தியை பரப்பியுள்ளார்.