கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவ 13 வயது சிறுவன், அண்ணாமலை நகரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல் சில தினங்களுக்கு முன்பும் வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 23ஆம் தேதி சிறுவன் சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு மருத்துவர்கள் செய்த பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை அண்ணாமலை நகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராகுல் (19) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் சிறுவனின் கழுத்தை நெரித்து, தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததை ராகுல் ஒப்புக் கொண்டார்.