கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமாகப் பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் கடந்த 2012ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கடும் நிதி சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே ஆண்டு இறுதியில் தற்போது தமிழக அரசின் முதன்மை செயலாளராக உள்ள சிவதாஸ் மீனா பல்கலைக்கழக தனி அலுவலராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
அவரின் அறிக்கையின்படி கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்தும் பணியில் சிவதாஸ் மீனா ஈடுபட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மிகையான பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களை பல்வேறு இடங்களுக்குப் பணி நிரவல் செய்தால் நிதி சிக்கல் தீரும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தமிழக அரசால் பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.