கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்வுக்கு இதுகுறித்து பல்வேறு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வீரமணி, துணை ஆய்வாளர் தவச்செல்வன் ஆகியோர் தலமையில், தனிப்படை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலித்தொட்டியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் விமல் ராஜ் (24) வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மற்ற இடங்களில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவித்தார்.