கடலூர்:கடலூர் நகர அரங்கம் அருகே உள்ள 4 முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இன்று (அக்.27) திறந்து வைத்தார். கடலூர் நகரில் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரிகள் விடுகின்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த பகுதிகளில் கூடுதலாக காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திறக்கப்பட்ட காவல் உதவி மையத்தில் இருந்து கடலூர் நேதாஜி ரோடு, பாரதி சாலை, கடலூர் அரசு மருத்துவமனை சாலை மற்றும் கல்லூரி சாலைகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்கள், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களை மையத்தில் இருந்தவாறு கண்காணித்து, புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு உள்ளது.
பின், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறுகையில், “இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதாவது முகம் தெளிவாக தெரியும்படி அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.