கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள லெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடித்து ஆட்டோவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது உறவுக்கார பெண்ணான சத்தியப்பிரியா (26) என்பவர் பேருந்து நிலையத்தில் நிற்பதைக் கண்டு விசாரித்துள்ளார். சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காத காரணத்தால், பேருந்துக்காக தான் காத்திருப்பதாக சத்யா பதிலளித்துள்ளார்.
அதே சமயம், தாமதமாகிவிட்டதால் இரவு ஆதி மூலத்தின் மகன் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் தான் தங்கிக் கொள்வதாகக் கூறி ஆட்டோவில் உடன் வந்துள்ளார். பிறகு ஆதிமூலத்தின் மகன் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி மனைவி ராஜாத்தி (40), கீர்த்திகா (20), மோனிகா (18) ஆகியோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக் கூறி, தான் எடுத்து வந்திருந்த மயக்க ஊசியை அவர்கள் உடலில் செலுத்தியுள்ளார். பின்னர் அனைவரும் மயக்கமடைந்த பிறகு உறவினர்கள் அனைவரும் அணிந்திருந்த 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.