வேதனை தெரிவிக்கும் வாத்து வளர்ப்பவர் - உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை கடலூர்:ஆந்திராவைச் சேர்ந்த பழனி என்பவர் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கொளக்குடி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் பட்டி அமைத்து தனக்கு சொந்தமான சுமார் 15,000 வாத்துகளை வளர்த்து வருகிறார். இங்கு பணிபுரியும் பணியாளர்கள் வாத்துக்கள் இடும் முட்டையை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாத்துகளை மேய்ச்சலுக்காக வாலாஜா ஏரி அருகே ஓட்டிச் சென்ற பொழுது, அங்கு வயல்களில் சம்பங் கோழிகள் பிடிப்பதற்காக குருணை மருந்து தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற வாத்துகள் சாப்பிட்டதால், சுமார் 250-க்கு மேற்பட்ட வாத்துகள் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தன.
இதுகுறித்து கடலூர் வனச்சரகர் ரமேஷ் விசாரணை நடத்தினார். இதில் கருங்குழியைச் சேர்ந்த எம்.பிரபாகரன் (36), சி.அருள்தாஸ் (56), கொளக்குடியைச் சேர்ந்த டி.பொங்கல்மாறன் (57) ஆகிய மூவரும் இறைச்சிக்காக பறவைகளுக்கு விஷம் வைத்ததும், இதில் வாத்துகள் விஷத்தை தின்றதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.
இதையும் படிங்க:228 கிலோ கஞ்சா கடத்தல்: பாமக, பாஜக நிர்வாகிகள் உட்பட 13 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
இதனை அடுத்து இவர்கள் மூன்று பேரையும் வனவிலங்குச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வனத்துறையால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விஷம் கலந்த நெல் விதைகளை வயலில் போட்டு வனவிலங்குகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணைக்குப்பின், அரைக் கிலோ எடையுள்ள எலி விஷம் மற்றும் தானியங்களை போலீசார் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அம்மூவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:‘காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது’ - அமைச்சர் ரகுபதி!
மேலும், வாலாஜா ஏரி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி கொக்கு, நாரை, நீர்க்கோழி, சம்பங் கோழி ஆகிய அரிய வகை பறவைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. மேலும், இது போன்று பறவைகளை பிடிப்பதற்காக வைக்கப்படும் மருந்துகளில் வாத்துகள் மற்றும் மீன்கள் அடிக்கடி சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு பராமரித்து வளர்த்து வந்த வாத்துகள் விஷம் கலந்த நெல்லை உண்டு உயிரிழந்ததால், தனது வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாகவும், ஏழ்மையில் உள்ள தனக்கு இதனால் பெரும் இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகவும் வருந்துகிறார் வாத்துகளை பராமரித்து வந்தவர்.
இதையும் படிங்க:கட்டுப்பாட்டை இழந்த கார்.. பேருந்தின் மீது மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!