கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன் (48). இவர் அதே பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31ஆம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் நகை வாங்க வந்துள்ளனர். அப்போது, இருவரும் நகை வாங்குவது போல் நடித்து, நூதன முறையில் நகைகளைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து தேவநாதன் காவல்துறையில் புகாரளித்ததையடுத்து, பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இரண்டு தனிப்படை காவல்துறையினர் திருடுபோன நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து பல இடங்களில் தேடி வந்தனர்.
நகை கடையில் நூதன முறையில் திருட்டு - 2 பெண்கள் கைது - நகை கடையில் நூதன முறையில் திருட்டு
கடலூர்: பண்ருட்டி அருகே நகை கடை ஒன்றில் நூதன முறையில் நகைகளைத் திருடிய இரண்டு பெண்கள் தேடப்பட்டு வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இதற்கிடையில், நேற்று பண்ருட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நடமாடிய இரு பெண்களை தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதற்கு இருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பழனிசாமி மனைவி செல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரத்னா என்பது தெரியவந்தது. இருவரும் பண்ருட்டி நகை கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுமட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 102 கிராம் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.