கடலூர்: கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கியது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன. இந்தப் பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர், மேலும் 40 பேர் மாயமாகினர்.
எனவே, இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் முதுநகர், சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் ஆகியோர் கடற்கரையை நோக்கி மலர்கள் மற்றும் பால்குடம் ஆகியவற்றுடன் பேரணியாகச் சென்றனர்.
பின்னர், அவர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல், கடலூர் துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் ஏராளமான பெண்கள் கையில் பால்குடத்துடன் துறைமுகத்தில் இருந்து கடற்கரைக்கு பேரணியாக வந்து, உயிரிழந்தவர்களை நினைத்து கடலில் பால் ஊற்றி மலர் தூவி, கடல் மாதாவை வணங்கி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவர்கள் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மீனவர்கள் ஊர்வலமாக வந்து, சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் இந்த நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!