2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சுனாமி என்னும் ஆழிப்பேரலையால் கடல் அலை சுமார் ஒரு பனை உயரத்திற்கு எழுந்ததால் சென்னை முதல் குமரி வரை கடற்கரையோர கிராமங்கள் சீர்குலைந்தன.
இந்த சுனாமி கோர பசிக்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் உட்பட பொதுமக்கள் இறந்தனர். மேலும் கடற்கரையோரம் உள்ள கிராம மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தனர். அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், வீடுகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இதனால் மீனவ மக்களின் கருப்பு தினமாக டிசம்பர் 26ஆம் தேதி ஆகிவிட்டது. சுனாமி தாக்கப்பட்டதில் தங்கள் ரத்தத்தின் ரத்தங்களை இழந்து நடைபிணமாக வாழும் சோக கதைகள் இந்த கரையோர கிராமங்களில் இன்றும் உள்ளது.
சுனாமி பேரலை தாக்கிய பின்பு கடற்கரை, மணலில் புதைந்தும், படகுகளுக்கு இடையும், முட்புதர்களுக்கு இடையேயும் இருந்து மனித உடல்களை எடுத்த சம்பவம் இன்றும் நம் கண் முன் வந்து செல்கிறது. அது நம் நினைவில் இருந்து நீங்கவில்லை என்பதே நிதர்சனம். இந்த கோர பேரலையில் பல மாதம் கழித்து எலும்பு கூடுகலாக மனித உடல்களை எடுத்த பரிதாபம் நம் நெஞ்சத்தை பதை பதைக்கிறது. இந்த சம்பவங்களை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத மரண ஓலங்கள் நம் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை வீடுகள், பொருட்கள், மனிதர்களை காவு வாங்கியது. மேலும் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதேபோல் கடலூரில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரதாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 ஆயிரம் கட்டுமரங்கள், பைபர் படகுகள், விசை படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்ட்ர் நிலங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தன.
சுனாமியால் தன் மனைவி, நான்கு குழந்தைகளை இழந்த அக்கரைக்கோரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த பலராமன் கூறுகையில்,
"காலை எப்போதும் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வேன். அன்றும் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் வீட்டிற்கு வந்து மூத்த மகளை கடலூர் அழைத்துச் சென்றுவிட்டு பின் ஊருக்கு வந்து பார்த்தால் சுனாமி பேரலை கிராமம் முழுவதும் தாக்கியுள்ளது. மீனவ கிராமமே முற்றிலும் மூழ்கி சில மக்கள் தப்பித்து கரையில் நின்றுகொண்டு உன் குடும்பமே கடல் அலை இழுத்து சென்றது நீ போகாத என்று கூறினர். ஆனால் நான் அவர்களை தீவரமாக தேடினேன் சில மணி நேரத்தில் சுசித்திரா, மஞ்சு, சுஷ்மிதா, கிஷோர் என நான்கு பிள்ளைகள், மனைவி காந்திமதி உடல்கள் முள்வேலியில் சிக்கி கொண்டு இறந்த நிலையில் கிடந்தது. மீதம் இருந்த என் இரண்டு மகள்கள் மட்டும் எனக்கு உயிருடன் கிடைத்தார்கள். இவர்கள் கூட எனக்கு அன்று கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" எனக் கூறினார்.
கடற்கரையோரம் கிராம மக்கள் அனைத்தையும் இழந்து இன்று காலசக்கரத்தின் சூழல் வேகத்தில் சிக்கி வெறும் நாட்களை மட்டும் கடந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் உள்ளுக்குள் இருக்கும் உறவுகளின் நினைவுகள் மறக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பொதுநல அமைப்பு, தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஆதரவு கரம் நீட்டி உதவிகளை செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்றினார்கள்.
சுனாமி என்னும் அழிப்பேரலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும், படகுகள், வலைகள் இழந்தவர்களுக்கு நிவாரணம் என தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் கடலூரை அடுத்த செல்லங்குப்பம் பகுதியில் 700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கட்டப்பட்ட வீடுகள் தரமற்ற நிலையில் உள்ளதாலும், பாதுகாப்பின்மை காரணமாகவும் மீனவ மக்கள் அங்கு வசிக்க அச்சம் அடைவதாகக் கூறப்படுகிறது.
15ஆவது ஆண்டு சுனாமி தினம் இது பற்றி சிங்காரத்தோப்பின் மீனவர் பேரவை தலைவர் திரு.எம்.சுப்புராயன் தெரிவிக்கையில், "சுனாமி பாதித்தபோது நிவாரணம் கொடுத்த அரசு அதை அவ்வப்போது ஆய்வு செய்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. பணக்காட்டுக்காலணி பகுதியில் 500 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை சம்பந்தப்பட்ட மக்களுக்கு இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மீனவ மக்கள் பலமுறை மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை " என்றார்.
சுனாமி பேரலை தாக்கி 15 ஆண்டான இன்று தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக சென்று பூக்கூடைகளையும், பால்குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்ற அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்துவர். மேலும் இன்று யாரும் மீன் பிடிக்க செல்லமாட்டார்கள்.
இதையும் படியுங்க:
சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி?