கடலூர்:கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், வீரமணி மகன் ஜீவா. இவர் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ஆனந்த். பிஇ (B.E) பட்டதாரியான இவர், தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் ஜீவா வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது, ஜீவா அருகில் வந்த ஆனந்த், உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி ஓடை பக்கமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த பேச்சு வார்த்தையின்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஆனந்த், கிட்டத்தட்ட 8 இடங்களில் ஜீவாவை பலமாக கத்தியால் குத்தியுள்ளார்.