தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரிடமே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... கோவையில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்!

கோவையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் வீட்டுப் பொருட்களை ஏற்றிச் சென்ற மினி லாரியை வழிமறித்து பணம் பறித்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

erode
கோவை

By

Published : May 22, 2023, 12:47 PM IST

கோவை:ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணன் உன்னி. இவர் தற்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். இதனையடுத்து கலெக்டர் பங்களாவில் இருந்த அவரது பொருட்களை நேற்று முன் தினம்(மே.20) மினி லாரியில் ஏற்றிக் கொண்டு, அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார். பொருட்களை ஏற்றி வந்த வாகனம் கோவை அவினாசி சாலை வழியாக பாலக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தது.

நள்ளிரவில் மதுக்கரை - நீலாம்பூர் பைபாஸ் சாலையில் கஞ்சிகோணம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென மினி லாரியை வழிமறித்த இளைஞர்கள், ஓட்டுநரிடம் லாரியின் டயர் பஞ்சராக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் லாரியை ஓரமாக நிறுத்தி டயரை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மூன்று இளைஞர்களும் ஓட்டுநரை சுற்றி வளைத்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த பத்தாயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இது தொடர்பாக முத்துக்கிருஷ்ணன் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பைபாஸ் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா, சுங்கச்சாவடி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காரில் வந்து செயின் பறிப்பு முயற்சி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

கோவையில் இதேபோல் கடந்த வாரம் நடந்த ஒரு வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே காலையில் கெளசல்யா என்ற பெண்மணி நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கெளசல்யாவின் செயினை பறிக்க முயன்றனர். அவர்கள் பெண்மணியின் செயினைப் பிடித்து இழுத்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இருந்தபோதும் அவர் தனது நகையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால், அவர்களால் செயினைப் பறிக்க முடியவில்லை.

இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக கெளசல்யா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

இதேபோல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு, எட்டரை சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 16 வயது சிறுவன் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கோவையில் அதிகரித்து வரும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை; 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த பொள்ளாச்சி போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details