இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘இரண்டாம் குத்து’ திரைப்படம் சமீபத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
முன்னதாக, இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தின் விளம்பரத்தை கண்களால் பார்க்க முடியவில்லை எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு சந்தோஷ் பி.ஜெயக்குமாரும் பாரதிராஜவை விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், கோவை ராஜவீதியில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் எதிரே உள்ள சுவரில் ‘இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவை அந்த வழியாகச் சென்ற பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த நிலையில், அவ்வழியே சென்ற, அந்தப் பகுதியைச் சேர்ந்த நகை பட்டறைத் தொழிலாளி தினேஷ் (வயது 35) என்பவர், போஸ்டர்களைப் பார்த்து ஆவேசமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்தப் போஸ்டர்களை கிழித்து எரிந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் நகைக்கடையில் வேலை செய்து வருகிறேன். வேலைக்கு செல்லும்போது ராஜவீதி பள்ளிக்கூடத்துக்கு எதிரே ஆபாசப் போஸ்டர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து‘ என்ற படத்தை எடுத்த இயக்குநரின் அடுத்த படம்தான் இந்த ‘இரண்டாம் குத்து‘. இந்த போஸ்டர் மிகவும் ஆபாசமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், அதுவும் பள்ளிக்கு எதிரே இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது வேதனை அளித்தது. ஆகவே முகம் சுழிக்கும் அளவிற்கு ஆபாசமாக உள்ள இந்தப் போஸ்டர்களை கிழித்தேன்" என்றார்.
'இரண்டாம் குத்து' போஸ்டரை கிழித்த நபர் இதையும் படிங்க... ’இதைப் பார்த்தால் கண்கள் கூசாதா’ - பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்!