கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மலைப்பாதை வழியாக மட்டுமே ஏறிச் செல்ல முடியும். சாலை வசதியோ, படிக்கட்டுகளோ இல்லை. வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோயிலுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர்.
இந்நிலையில் நேற்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சடலத்தில் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த நபர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூர்யா(24) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டதில், "சுகசூரியா சிவன் பக்தர் என்றும் அடிக்கடி வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட சிவன் கோயிலுக்கும், மலை கோயில்களுக்கும் தனியாகச் சென்று வருவார் என்றும் அவ்வாறு கோயில்களுக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவார்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி கோயிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர் சுகசூர்யா சிறுத்தை தாக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் காட்டு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் இருக்கும் பகுதியைச் சுற்றி வனத்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு சிறுத்தை இருப்பின் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:UP Slap Video: சிறுபான்மை மாணவரை அறையச் சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு!