கோவை:மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரமணி (வயது 20) என்ற இளம்பெண் மற்றும் சஞ்சய் (வயது 20) ஆகிய இருவரும் கடந்த 6 ஆம் தேதி வேளாங்கண்ணியில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு சஞ்சய் பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் ரமணி, சஞ்சய் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சஞ்சய் அடிக்கடி கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன் செல்போனில் பேசி வந்து உள்ளார். இதனால் ரமணிக்கும் சஞ்சய்க்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை (29/05/2023) வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் சஞ்சய் ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துள்ளார். இதில் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து அந்த கொலையை மறைப்பதற்காக தனது தந்தை மற்றும் தாயாரின் உதவியுடன் ரமணியின் உடலில் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து மாற்று துணிகளை அணிவித்து சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளனர். இதனை அறியாமல் அக்கம் பக்கத்தினர் புளி கரைசலை கரைத்து ரமணியின் வாயில் ஊற்றியுள்ளனர்.
பின்னர் ஆலாந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரமணியின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பரிசோதித்து தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.