கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோயில் பின்புறம் உள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இரு வயதானவர்களுடன், இளைஞர் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நேற்று (பிப்.3) மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்த அந்த இளைஞர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்களும் அண்டை வீட்டார்களும் குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இளைஞர் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அப்போது அந்த இளைஞர் கதவை திறக்காமல் புறக்கணித்து வந்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி விசாரித்துள்ளனர்.