தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி முத்துகிருஷ்ணன் கடையை மூடிவிட்டு சொந்த ஊரான தூத்துக்குடியில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் திருவிழாவை முடித்துக் கொண்டு நேற்று மீண்டும் குனியமுத்தூர் பகுதிக்கு வந்து கடையை திறக்க முற்பட்டபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.20ஆயிரம் ரொக்கம், எல்.இ.டிவி உள்ளிட்டவைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் , கடைக்கு வந்து அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போது, இரு இளைஞர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபடுவது பதிவாகியிருந்தது.