கோவை: கோவை மாவட்டம், காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர், குப்புசாமி (50). விவசாயம் செய்து வரும் குப்புசாமி, தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று(ஏப்.27) மாலை காளியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(34) என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் கள் குடிப்பதற்காக குப்புசாமியின் தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் ஒன்றாக சேர்ந்து கள் குடித்துள்ளனர். இதில், அளவுக்கு அதிகமாக கள் குடித்த ஜெயக்குமார், போதை தலைக்கு ஏறியதால் அங்கேயே படுத்துவிட்டார். அவரது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இதனிடையே இரவு நேரம் வந்ததால், காட்டு யானைகள் விளைநிலத்திற்குள் நுழையாமல் இருப்பதற்காக போடப்பட்ட மின்வேலியை குப்புசாமி ஆன் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து ஓரளவு போதை தெளிந்த ஜெயக்குமார் தோட்டத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக, தோட்டத்தின் வாயிலில் காட்டுயானைகளை தடுக்க போடப்பட்டிருந்த மின்வேலியின் மீது விழுந்துள்ளார். இதையடுத்து மின்சாரம் பாய்ந்து ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.
இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தைக்கான நோக்கத்தையே சிதைக்கும்: உயர்நீதிமன்றம்