கோயம்புத்தூர்:மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியை ஒட்டி உள்ள கோவை மண்டலத்தில் மதுக்கரை, போலுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என ஒவ்வொரு பகுதிகளிலும் ஒன்று என்ற விகதத்தில் மொத்தம் ஏழு வனச் சரகங்கள் உள்ளது.
இதில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளna. இந்த வனச்சரகங்களில் சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய வனச்சரகங்கள் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு அருகாமையில் உள்ளது.
இதன் காரணமாக, அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 10க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மற்ற வனச்சரகங்களிலும் புலிகள் அவ்வப்போது தென்பட்டுள்ளதால், அவற்றை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் வனத்துறையினர் மற்றும் உலக வனவிலங்கு நிதியத்தின் இந்திய அமைப்பு சார்பில் M-STrIPES என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் முறையில் அமையப் பெற்ற செயலி மூலம், புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வனக் காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வனவிலங்கு நிதியத்தின் இந்திய அமைப்பின் உறுப்பினர்கள் ரவிக்குமார் மற்றும் ஸ்ரீ குமார் கூறுகையில், “கோவை மண்டலத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில், இந்த செல்போன் செயலி மூலம் வனப்பகுதிக்குள் சென்று அங்கு உள்ள விலங்குகள் குறித்த தகவல்கள் இதில் பதிவு செய்யப்படும். பின்னர் அனைத்து இடங்களிலும் பதிவான விலங்குகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அவை எத்தனை உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.
கடந்த காலங்களில் வனப்பகுதிக்குள் கணக்கெடுக்க செல்பவர்கள் வனவிலங்குகள் தென்பட்டால் அவற்றை நோட்டில் குறிப்பிட்டு, பின்னர் எண்ணிக்கையை கணக்கீடு செய்வார்கள். ஆனால், இந்த செயலி மூலம் என்ன விலங்குகளை எந்த இடத்தில் பார்க்கிறோம் என்பதை ஜிபிஎஸ் லொகேஷன் மூலம் உடனுக்குடன் பதிவு செய்த கொள்ள முடியும்.