கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியில் தனியார் சிமெண்ட் நிறுவனம் (ஏசிசி சிமெண்ட்) செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில், பேராட்டத்தில் ஈடுபட்ட குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த காய்த்திரி என்ற பெண்ணை மூன்று நபர்கள் (யுவராஜ், கணேசன், ராஜாஜி) வீட்டிற்குள் புகுந்து தாக்கியுள்ளனர். சிமெண்ட் தொழிற்சாலை விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டுமென மிரட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த காயத்திரி அரிசிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுக்கரை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாக்கப்பட்ட பெண் காய்த்திரி இதுகுறித்து பூர்ணிமா என்பவர் கூறியதாவது, "சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் புகையால் ரொம்பவே பாதிக்கப்படுகிறோம். இந்தப் புகையால் குழந்தைகளுக்கு சாதாரணமாக சளி வந்தால் சரியாக ஒரு மாதம் ஆகும். தோல் பிரச்னை ஏற்படுகிறது. குடிக்கிற தண்ணீரில் இருந்து, சாப்பாடு, உடுத்தும் உடை வரைக்கும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஒன்றரை மாதம் அதிகளவில் தூசி கலக்குது. இதைப்பற்றி சிமெண்ட் நிறுவனத்திடம் குற்றச்சாட்டு வைத்தோம்.
சிமெண்ட் நிறுவனத்தினர் இதனை சரிசெய்ய ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால், இரு தினங்களுக்கு முன்பு அதிக தூசி கலந்த புகை வந்ததால் நிறுவனத்தை முற்றுகையிட்டோம். அதற்காக இன்று (ஆகஸ்ட் 28) காலை காயத்ரி என்ற பெண்ணை மூன்று நபர்கள் தாக்கியுள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்" என்றார்.
காவல் நிலையத்தில் முறையிட்ட பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் நிதின் கூறுகையில், "இன்று காலை மூன்று நபர்கள் வீட்டிற்குள் வந்து தகாத வார்த்தைகளால் பேசி என் அம்மாவை தாக்கினர். இதனால் காயமடைந்த எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு தமிழில் வேண்டும் : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு