புரட்டாசி மாதத்தில் இருக்கும் விரதங்களில் ஒன்று நவராத்திரி விரதம். மொத்தம் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும் அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் என்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
இதில் தமிழ்நாடு ஆர்ய வைசியா மகா சபை கிளை சார்பாக, கோவை சஹானா குழுவைச் சேர்ந்த 50 பெண்கள் சேர்ந்து இடைவிடாமல் இரண்டரை மணி நேரம் வீணை வாசித்து இசை கச்சேரி நடத்தினர். குறிப்பாக துணியை கண்களில் கட்டி 'ரகுபதி ராகவ ராஜராம்' பாடலை வீணையில் வாசித்து அசத்தினர். மேலும் நிகழ்ச்சியில் முருகன், சரஸ்வதி, துர்க்கையம்மன் பாடல்களை வீணையில் இசைத்தனர்.