கோயம்புத்தூர்: தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குதல் என்ற திட்டத்தை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்.15) நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
திமுக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது. அதன்படி சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை வாங்குவதற்கு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சம் குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமை தொகை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சோதனை அடிப்படையில் குடும்ப பெண்களுக்கு, வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் நேற்று போடப்பட்டது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைக் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் துவங்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.