கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறிவிட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அனுராதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்குக் கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.