கோயம்புத்தூர்: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள மாணவாளபுரம் அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் சென்றிருந்தார். அப்போது திலகவதி(வயது 40) என்பவருடன் ரதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து திலகவதியுடன், ரதி திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது ரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்ட திலகவதி திடீரென குழந்தையுடன் மாயமானார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் நபர் ஒருவருடன் திலகவதி, குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருச்செந்தூர் போலீசில் ரதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குழந்தையை கடத்திய திலகவதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்துள்ள முட்டத்துவயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ஆலாந்துறை போலீசார் அங்கு சென்று, திருச்செந்தூரில் குழந்தையை கடத்திய சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் திருச்செந்தூரில் கடத்திய குழந்தை சேலம் ஆத்தூரில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.