கோயம்புத்தூர்: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தீத்திபாளையத்தை ஒட்டி உள்ள மலை அடிவார கிராமங்களுக்கு இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாக பொதுமக்களால் கூறப்படுகிறது.
இந்த காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தரப்பில் வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம் தீத்திபாளையம் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது அங்கு இருந்த ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டும், விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அய்யாசாமி மலை அடிவாரத்தின் அருகாமையில் உள்ள தோட்டங்களிலும், கிராமப்பகுதிகளிலும் உலா வந்துள்ளது.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.