கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ளதால் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழ்நாடு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. மேலும் மருதமலை வனப்பகுதியிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த யானைகள் மருதமலை வனப்பகுதி அருகில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை மற்றும் அதன் குட்டி ஐஓபி காலனி மாலதி நகர் பகுதிக்குள் புகுந்தது.
பின்னர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த யானைகள் குமார் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது. அதனை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றதால் உள்ளே வந்த யானைகள் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என பார்த்துவிட்டு திரும்பி சென்றது.