கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை யானை தனியாகச் சுற்றிவருகிறது. இரவானால் சூர்யவம்சம் படத்தில் வரும் சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவார் என்பதுபோல, பாகுபலி யானை இரவானால்போதும் ஊருக்குள் புகுந்து வேளாண் பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பாகுபலி யானையைப் பிடித்து அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவியை பொருத்த வனத் துறையினர் எடுத்த முயற்சிகள் கைக்கூடவில்லை. இதையடுத்து, ரேடியோ காலர் பொருத்தும் பணியை கடந்த மாதம் 28ஆம் தேதி வனத் துறையினர் நிறுத்திவைத்தனர்.
பாகுபலி யானை உலா
எனினும் பாகுபலி யானையின் நடமாட்டத்தைக் கண்டறிய வனப்பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சுமார் 20 நாள்களுக்கும் மேலாக வனத் துறையினர் கண்ணில் அகப்படாமல் சுற்றிய பாகுபலி யானை, நேற்றிரவு (ஜூலை16) வனத்தை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பாலப்பட்டி சாலையில் உள்ள ஊமப்பாளையம் முனியப்பன் கோயில் அருகே ஆடி அசைந்து உலா வந்தது.