கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகங்கள் உள்ளன. இதில் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச் சரகங்களில் இருந்து வெளியே வரும் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் செல்வது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது யானைகள் அனைத்து மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில், பிறந்து 4 முதல் 5 மாதங்களே ஆன 'குட்டியானை' ஒன்று கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து, வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் குட்டியானை ஒன்று தனியாக சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டியானையை பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு, குட்டியானையை அதன் தாயுடன் சேர்க்க வாகனத்தில் குட்டி யானையை ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் கிளம்பினர். அதனிடையே குட்டி யானையின் யானைக் கூட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க, குட்டியானையை ஆற்று நீரில் குளிக்க வைத்து, பின்னர் காட்டுக்குள் அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவந்தனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி குட்டியானை யானைக்கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. தனது தாயைப் பார்த்ததும், குட்டியானை உற்சாகமாக ஓடிச்சென்று தனது தாயுடன் சேர்ந்து கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.