கோவை: முருகன்பதி கிராமத்தைச்சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக மனைவி தெய்வானையிடம் தகராறு செய்வதை வாடிக்கை வைத்திருந்த நிலையில் மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒத்தக்கல் மண்டபம் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த மனைவிடம் குடிப்பதற்கு 50 ரூபாய் கேட்டுள்ளார். தர மறுத்த மனைவி தெய்வானையை நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில் 6 முறை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் தனக்குத்தானே வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
தெய்வானையின் அலறல் சத்தம்கேட்டு அங்கு சென்ற தெய்வானையின் சகோதரியும், அவரது கணவரும், தற்கொலைக்கு முயன்ற முத்துசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் முத்துசாமி மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தினர் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் முத்துசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2010இல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி மேல்முறையீடு செய்தார்.