கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், அவர் மனைவி புவனேஸ்வரி. கடந்த நவம்பர் மாதம் வங்கியில் அடமானத்தில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த சிவாஜி - ஈஸ்வரி தம்பதியினரின் லாரியை வாங்கி அதற்கு மாதத் தவணை செலுத்திவந்துள்ளனர். ரவிச்சந்திரன் அந்த லாரியைக் கொண்டு லோடு ஏற்றி இறக்கும் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆந்திராவிலிருந்து சத்யநாராயணன் என்பவர் 25 டன் அரிசி லோடை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் லோடு வரவில்லை என்று ரவிச்சந்திரனிடம் கேட்டுள்ளார்.
அப்போது தான் எந்த லோடும் ஏற்றவில்லை என்றும் மேலும் கோவை முதல் சென்னை தவிர வேறு எங்கும் லோடுக்கு செல்வதில்லை என்றும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால் இதை நம்பாத சத்யநாராயணன், ஆந்திர காவல் துறையினரிடம் ரவிச்சந்திரன் மீது புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் ரவிச்சந்திரன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து லாரியை பார்க்க வேண்டும் என்று கூறி ரவிச்சந்திரனை அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று, கோவை - திருச்சி சாலையிலுள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை காண்பிக்க ரவிச்சந்திரன் சென்றுள்ளார். அங்கு சென்ற ரவிச்சந்திரனையும் அவரது லாரியையும் அங்கிருந்த ஆந்திர காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.