கோயம்புத்தூர்:தமிழகத்தில்விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது மருத்துவமனையில் பலர் சிகிச்சையில் உள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இந்த கள்ளச்சாராய மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதுபோல, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரை அடுத்த, பெருங்கரணை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில், கள்ளச்சாராயத்திற்கு 11 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இல்லை. தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக்கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாகி ஏராளமான சீரழிவுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிகரிக்கின்றன.
வளச்சி அடைந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு அரசே மதுக் கடைகளையும், மதுபான பார்களையும் நடத்துவது தான் காரணம். இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தினால், மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும் என்று எப்போதும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.
ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், எங்கும் தாராளமாக மது கிடைக்கும் நிலையில், ஒரே நாளில் இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து தப்பித்து விடலாம் என நினைப்பது தவறு. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.