தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2023, 9:14 AM IST

ETV Bharat / state

கமல்ஹாசனிடம் கார் பரிசு பெற்ற ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்திக்காதது ஏன்?

புதிய கார் வாங்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காசோலை வழங்கிய நிலையில், அரசியல் காரணங்களால் செய்தியாளர் சந்திப்பை ஷர்மிளா ரத்து செய்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்:கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற வகையில் பிரபலமானவர் ஷர்மிளா (23). இவரை பற்றிய செய்திகள் இணைய தளங்களில் வைரலாகி வந்த நிலையில், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அந்த பேருந்தில் பயணம் செய்து ஷர்மிளாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். கனிமொழி பயணம் செய்த ஒரு மணி நேரத்தில் தன்னை பேருந்து உரிமையாளர் துரைக் கண்ணன் வேலையை விட்டு நீக்கியதாக செய்தியாளரிடம் ஷர்மிளா தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை பேருந்தின் பெண் நடத்துநரான அன்னத்தாய் அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொண்டது குறித்து தான் கேட்டபோது, தன்னை பணியில் இருந்து நீக்கியதாகவும், பேருந்து ஓட்டுநர் பணியை விட்டு கால் டாக்ஸி ஓட்டப் போவதாக தெரிவித்தார்.

இதற்கு பேருந்து உரிமையாளர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஷர்மிளாதான் ஓட்டுநர் பணிக்கு வர முடியாது என தெரிவித்துச் சென்றதாகவும், ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் மாற்றி பேசுகிறார் எனவும் பேருந்து உரிமையாளர் தெரிவித்தார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் ஷர்மிளா சந்தித்து உரையாடினார்.

அப்போது வாடகை கார் வாங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் பணம் உதவி செய்யும் என தெரிவித்து அதற்கான முதல் கட்ட காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் வழங்கினார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை மற்றும் காசோலை வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை ஷர்மிளா சந்திக்க உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, செய்தியாளர் சந்திப்பிற்கு அனைவரும் தயாராக இருந்த நிலையில், மாலை 5.45 மணியளவில் ஷர்மிளாவின் தந்தை செய்தியாளர்களைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்கில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணியாக கோவை பெண்ணுக்கு உதவி வழங்கியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க:கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தல்: ஆளுநர் தலையிட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details