கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் இன்று முதல் ஜூலை 31 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் 280 அரங்குகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் பெரியார், அப்துல் கலாம், திருவள்ளுவர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், வரும் 28ஆம் தேதி 5,000 மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இங்கு பயனுள்ள நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதற்கு, கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகச் சீர்கேடு தான் காரணம்.
1,50,000 கோடி ரூபாய்க்கு கடன் சுமை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 16,500 கோடி வட்டி செலுத்தக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது. மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. மின்மிகை மாநிலம் என்றால், 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக 21 ஆண்டுகள் ஏன் காத்திருக்கிறார்கள்?. 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.