கோயம்புத்தூர் சித்ரா பகுதியிலுள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 35 ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்து கொண்டு 3877 மாணவர்களுக்கு பட்டங்களையும், 71 தரவரிசை பெற்றவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிகளவில் பெண்கள் பட்டம் பெற்றதும், பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும். நமது நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
இதை எண்ணி மாணவர்கள் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்த புதிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் தனது பங்கினை செலுத்த வேண்டும். உறுதியான திறன்மிக்க அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியா தற்போது உருவாகி வருகிறது. சர்வதேச அளவில் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கி இருக்கின்றன.
உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. கோவிட் பாதிப்பிற்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்டு உள்ளது. உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தியாக சர்வதேச நாடுகள் இந்தியாவை பார்க்கின்றன.
உலக அளவில் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கியுள்ள நாடாக இந்தியா உள்ளது. முன்பு வெறும் 500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது 90ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளனர். இவை அனைத்தும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராக்கெட்கள், விண்வெளி கருவிகள், பெருங்கடலின் ஆழத்தை அளக்கும் கருவிகள் என கற்பனைக்கு எட்டாத பல்வேறு விஷயங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர்.
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய உற்பத்திக்கான மையமாக விளங்கி வருகிறது. முன்னேறி வருகிறது. மொபைல் போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் நாம் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். விரைவில் ஆட்டோமொபைல் உற்பத்தியிலும் நாம் முன்னணியிடத்தை பிடிக்கவுள்ளோம்.
எந்த ஒரு நாடு வளர்ச்சி அடையும்போதும் அது மற்ற நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி சிக்கல்கள் உருவாக்கும்; பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஸ்ரீலங்காவின் வளர்ச்சியும் அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும் கூறலாம். அந்த சூழல் சீனாவிற்கு சாதகமாக அமைந்தது. அந்த சூழலில் ஸ்ரீலங்காவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா பொருளாதார உதவிகளை செய்தது.
உலக அளவில் இந்தியா வளர்ச்சி அடையும்போது குறிப்பாக கோவிட் பாதிப்பின்போது மக்கள் தடுப்பூசி எதிர்பார்த்து காத்திருந்த நேரம் தடுப்பூசியை உருவாக்கிய நாடுகள் அதனை விலை உயர்த்தி விற்பனை செய்தனர். ஆனால், இந்தியா சுயமாக கரோனா தடுப்பூசியை உருவாக்கி, சுமார் 150 நாடுகளுக்கு இலவசமாக வழங்கியது. இதற்காக நாம் நமது விஞ்ஞானிகளுக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும் இதுவே புதிய இந்தியா.
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியா வளர்ச்சியில் இருந்ததாக பல தலைவர்கள் பேசுகின்றனர். இது என்ன மனநிலை. உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா அதற்கும் வழிகாட்டும் விதமாக மாற்று எரிசக்திக்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு பிரதமர் அவர்கள் சூரிய எரிசக்தி பயன்பாட்டுக்கான அமைப்பினை உருவாக்கியபோது சில நாடுகள் மட்டுமே இணைந்தன. ஆனால், இன்று அந்த அமைப்பில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. பல நாடுகள் இணைவதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.