இயந்திர மயமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் பெற்றோரையும், உறவினர்களையும் அரவணைப்பது என்பது அரிதாகி வருகிறது. பணத்தை தேடி ஓடுவதால் உறவுகள் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் காயத்ரி என்பவர் தனது தந்தையுடன் இணைந்து இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நாய்க்குட்டியை தத்தெடுத்து அதனை பராமரித்து வருகின்றார். அது மட்டுமில்லாமல் அந்த நாய் குட்டிக்கு ‘வீரா’ என பெயரிட்டும், நடப்பதற்கு எடை குறைவான வாகனம், செயற்கைக் கால் ஒன்றையும் அவர்களே வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து காயத்ரி கூறுகையில், வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்தேன். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிந்து வந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அடுத்து சீரநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் அமைப்பிடமிருந்து பொமரேனியன் நாய்க்குட்டி (வீரா) ஒன்றை தத்து எடுத்தோம், அங்கு சென்றிருந்தபோது இந்த நாய்க்குட்டியை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு அதனை வீட்டில் கொண்டு வந்து வளர்க்க முடிவு செய்தோம்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: இரண்டு கால் நாய்க்கு இன்ப வாழ்வை காட்டிய இளம் பெண் அதன் பின்னங்கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் நடப்பதற்கே மிகவும் சிரமப்பட்டதால் அந்த நாய்க்குட்டிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டுக்குக் கொண்டு வந்து தந்தை உதவியுடன் நாய் நடக்கும் வகையில் சக்கரம் பொறுத்திய வாகனம் ஒன்றை உருவாக்கி அதில் நாய்க்குட்டியை அமர வைத்து நடைபயிற்சி கொடுத்து வந்தோம்.
தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஓரளவிற்கு நாய்க்குட்டி நடந்து செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பிவிசி பைப் மூலம் செயற்கை கால் உருவாக்கியும் அதனை பொறுத்தி நடக்கும் வகையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கடைகளுக்கு சென்று அதிக பணம் கொடுத்து நாய்க்குட்டிகளை வாங்குவதைவிட சாலையில் கை விடப்பட்ட நாய்களை கண்டறிந்து அவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்கலாம் அதன் மூலம் அந்த நாய்களுக்கு மறு வாழ்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து காயத்ரியின் தந்தை காசி பேசுகையில், மகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த நாய்க்குட்டியை தத்தெடுதோம் கால் துண்டிக்கப்பட்டதை பார்த்தவுடன் அதற்கு ஏதாவது செய்யவேண்டும் என எனக்கு தோன்றியது. ஒரே இடத்தில் நடக்கமுடியாமல் இருந்ததால் நாய்க்குட்டி கடுமையான மன உளைச்சலில் இருந்தது. இதனை சரிப்படுத்த நாய்க்குட்டி நடக்கும் வகையில் மாட்டு வண்டியை போல் உருவாக்கி, பின்னர் செயற்கைக்கால் ஒன்றையும் வடிவமைத்தோம். இதன்மூலம் இந்த நாயை நடக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என இவ்வாறு கூறினார்.
இவர்கள் இருவர் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் இந்த வீராவை தங்களது குடும்ப உறுப்பினராக எண்ணி பராமரித்து வருவது அவர்களின் உயர்ந்த பண்பை காட்டுகிறது. இச்செயலனாது இயந்திரமாக வாழும் மக்களின் மனதில் இருக்கும் ஈரத்தன்மையை வெளிக்கொணரும் வாய்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஆணையர் தகவல்