ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் கோயம்புத்தூர்: தமிழகத்தில் உள்ள பாரம்பரியமான தொழில்களில் கைத்தறி நெசவுத் தொழிலும் ஒன்று. அப்படியாக கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலை புவிசார் குறியீடு பெற்று தனித்தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
அதே சமயம், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பட்டு பார்டருடன் கூடிய சேலைகளை முறைகேடாக விசைத்தறியால் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதால் கைத்தறி சேலைகள் விற்பனைப் பாதிப்பு அடைகிறது. நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல்வேறு தலைமுறைகளாக கைத்தறி நெசவு மூலம் கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
வழக்கமான சேலைகள் போல் இல்லாமல், பல்வேறு வடிவங்கள் இத்தகைய சேலைகளில் இடம் பெறுவதால் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது, இந்த நெகமம் கைத்தறி சேலைகள். இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் தமிழகம் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நெசவு நூலின் விலை ஏற்றம், கைத்தறி சேலைகள் விற்பனை சரிவு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது கைத்தறி சேலைகள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிணத்துக்கடவு அருகே உள்ள நெகமத்தில் நெசவாளர்கள் குடும்பத்தினருடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கைத்தறி நெசவுக்கு ஜிஎஸ்டி வரி மத்திய அரசு விதித்தால் கைத்தொழில் மற்றும் கைத்தறி தொழில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், கைத்தறியில் ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்யகோரியும், உடனே அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், "தற்போது விசைத்தறியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மூலம் உருவாகும் சேலைகளில் பயன்படுத்தப்படும் நூல் மற்றும் பட்டு அனைத்தும் மிகவும் தரமானவை. அவை விலையும் அதிகமாகும். ஆனால், விசைத்தறியில் உருவாகும் சேலைகளை தரமான காட்டன் மற்றும் பட்டுச் சேலைகள் என்று கூறி குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக மக்கள் அதையே அதிகம் வாங்குகின்றனர்.
மேலும், முன்பு எல்லாம் வாரத்திற்கு 3 முதல் 4 சேலைகள் வரை நெசவுக்கு ஆர்டர் வரும். ஆனால் தற்போது வாரத்திற்கு ஒரே ஒரு ஆர்டர் மட்டுமே கிடைக்கிறது. இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து எங்களது வாழ்க்கையை நடத்துவது என்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Tiruchendur Express: தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'சூப்பர் பாஸ்ட்' ரயிலாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்!