கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சஞ்சய்சத், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டை பிகார் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல் எனவும், மத்திய பாஜகவின் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதிமுக ஆட்சியின் அராஜக ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் நிச்சயம் அமையும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண்மை திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நவ.28ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் ஏர்க்கலப்பை பேரணி நடத்தப்படும், ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கண் துஞ்சாமல், அயராது தீவிரமாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இரவும், பகலும் திரும்ப திரும்ப வருவது போல வெற்றி, தோல்வி வரும். அதுதான் ஜனநாயகத்தின் அழகு. சர்வதிகாரிகாரிகள் கவர்ச்சிகரமாக தான் இருப்பார்கள். கவர்ச்சிகரமாக தான் பேசுவார்கள். ஹிட்லர், முசோலினி போல மோடி செய்து வருகிறார்.