கோயம்புத்தூர்: அண்மையில் வெளியான 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த படக்குழுவினரை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நிலையில், பல்வேறு மாநில அரசுகள் இந்த படத்திற்கு வரி சலுகைகள் வழங்கி உள்ளது. மேலும், அரசு அலுவலர்கள் இந்த படம் பார்க்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொடூர சம்பவங்கள் குறித்து படம்
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அகில இந்திய பாஜக மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறுகையில், "காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் இந்தியில் எடுக்கப்பட்டு ஆங்கில சப்-டைட்டில் போடப்பட்ட படம். காஷ்மீரில் நடந்த கொடூர சம்பவங்கள் குறித்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் வரும் வசனங்கள், ஒவ்வொரு செய்தியை சொல்லும். நாட்டிற்குள்ளேயே மதத்தின் காரணமாக சிறுபான்மையினராக்கப்பட்டு, அவர்கள் அரசின் எந்த பாதுகாப்பு உதவியும் இல்லாமல் இருந்தது குறித்தது. 1990-களின் முற்பகுதியில் காஷ்மீர் போராட்டத்திற்காக மாணவ பருவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
வரிச்சலுகை கொடுக்க வேண்டும்
குறிப்பிட்ட சிறுபான்மை மக்களின் மிகப்பெரிய சோக செய்தியை சொல்லும் சரித்திரமாக படம் உள்ளது. இந்தியாவில் இதுபோன்று வேறு எங்கும் நடக்கவில்லை. இன்றுவரை அவர்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்கவில்லை என்ற கவலை உள்ளது. பண்டிதர்களின் துயரத்தை வெளிகொண்டு வந்துள்ள இந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிச்சலுகை கொடுக்க வேண்டும்.
காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்து உருகிய வானதி இன்றும் காஷ்மீரில் பண்டிதர்கள் வாழ பயமாக உள்ளது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு மத அடிப்படைவாத அமைப்புகள் தொந்தரவு கொடுக்கின்றனர். இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் 370-பிரிவிற்கு ஏன் எதிர்ப்பு தெரிவித்தார்கள். டெல்லியில் இன்னமும் பண்டிதர்கள் சாலையில் உள்ளனர். அவர்களுக்கான நியாயம் என்ன?" என்றார்.
ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை
கோவைக்கு புதிய ரயில்கள் தரவில்லை என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கோவையை தனிகோட்டமாக மாற்ற வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் நான் நேரில் கோரிக்கை வைத்தேன். இத்தனை ஆண்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக ரயில்கள் இயக்கப்படவில்லை.
அறிவிக்கப்பட்ட ரயில்கள் இன்னும் ஓடவில்லை, அறிவிக்கப்பட்ட ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. கோவை - பெங்களூரு இடையே ரயில் இல்லாமல் இருந்தது, அது தற்போது வந்துள்ளது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார் என்பதில் சந்தோஷம், அவரின் ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்கு நான் துணை நிற்பேன்" என்றார்.
இதையும் படிங்க:'உங்களைப் பார்க்க ஓடோடி வந்தோம் அங்கிள்' - மு.க.ஸ்டாலினை பார்த்த நரிக்குறவர் இன மாணவிகள் நெகிழ்ச்சி