கோவை: ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த மையத்தில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பறவை ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையம் அமைந்து உள்ள பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தை உள்ளிட்டப் பல்வேறு வனவிலங்குகள் அதிகம் நடமாடும். இந்த பறவைகள் ஆராய்ச்சி மையத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் என்பவர் கடந்த வாரம் ஆராய்ச்சி படிப்பிற்காக வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு உணவை முடித்துக்கொண்டு, இரு நண்பர்களுடன் விஷால் தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானையைப் பார்த்து அனைவரும் ஓட முயற்சி செய்த நிலையில், அந்த யானை விஷாலை தும்பிக்கையால் தாக்கியது. இதனை அடுத்து அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று அங்கு இருந்தவர்களிடம் யானை தாக்கிய சம்பவத்தைக் கூறி உள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த ஊழியர்கள் படுகாயத்துடன் இருந்த விஷாலை மீட்டு உடனடியாக கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷாலுக்கு இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதைக் கண்டறிந்து அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்தனர். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் விஷாலை கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.