தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீட்டுக்கு ஒரு குடம் நீர்; ஆளுக்கு ஒரு செடி' என்று அடர் வனத்தை உருவாக்கிய கிராம மக்கள்!

கோயம்புத்தூர்: 'வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர்; ஆளுக்கு ஒரு செடி' என்ற கருத்தை முன்னிறுத்தி, அடர் வனத்தை உருவாக்கிய கிராம மக்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

அடர் வனத்தை உருவாக்கிய கிராம மக்கள்
அடர் வனத்தை உருவாக்கிய கிராம மக்கள்

By

Published : May 20, 2021, 8:29 PM IST

Updated : May 21, 2021, 12:37 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் வளர்ச்சி காரணமாக தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், பவுண்டரிகள், ஸ்டீல் கம்பெனி உள்ளிட்டவை அதிகளவில் உருவாகியுள்ளன.

இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு பருவ மழை இல்லாததால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. இதனால் குளம், குட்டைகள் வறண்டு போய்விட்டன. கால் நடை வளர்ப்பு குறைந்துவிட்டது.

அடர் வனத்தை உருவாக்கிய கிராம மக்கள்

இதையடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெப்ப நிலையைக் குறைக்கவும், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியை அடுத்த செம்மானிசெட்டிபாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நட அக்கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. கிராமம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி முதல் கட்டமாக ஊருக்கு வடக்கே உள்ள குளத்தில் 2,000 அரிய வகை மரக்கன்றுகள் நட்டு மக்கள் பராமரித்து வருகின்றனர். மியாவாக்கி (Miyawaki) என்றழைக்கப்படும், குறுங்காடு அமைக்கும் முறையில் 150 அடி நீளம் 125 அடி அகலத்துக்கு குழி தோண்டப்பட்டு, மக்கும் கழிவுகள் அதில் நிரப்பி சமன்படுத்தப்பட்ட தளத்தில், மூன்று அடி இடைவெளியில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை மக்கள் நட்டுள்ளனர். இதற்காக சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சொர்க்க மரம், பாதாம் மரம், பலா, பூவரசன், நாவல், வில்வம், நகப்பழம், வேம்பு, சீத்தா பழம் உள்ளிட்ட 25 மிக அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதுகுறித்து செம்மானிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாக்கியராஜ் கூறுகையில், "எங்கள் கிராமத்தை முன் மாதிரி கிராமமாக உருவாக்கத் திட்டமிட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். முதல்கட்டமாக நாங்கள் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு உள்ளோம். அடுத்து இதைச் சுற்றி வேலி அமைக்க உள்ளோம். இந்தப் பகுதியில் மரம் வளர்ப்பு மூலம் மழை அதிகரிக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயரும், வெப்பம் குறையும். எனவே, இந்த மரக்கன்றுகளை ஊர்கூடி நட்டு உள்ளோம். இளைஞர்களுக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை உருவாக்கி உள்ளோம். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் பராமரிப்பு வேலி அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு ஊராட்சி முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது" என்றார்.

இதுகுறித்து ரகுராமன் கூறுகையில், "தங்களுடைய கிராமத்தில் 100 அடிக்கும்கீழ் நிலத்தடி நீர் சென்றுள்ளது. புன்செய் நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறி உள்ளது. இதனால் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி உள்ளது.

இதனைத் தொடர்ந்து வறட்சியைப் போக்கவும் கிராமத்தைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலையை உருவாக்கவும் அடர் வனம் உருவாக்கத் திட்டமிட்டோம். ஊர் மக்களைத் திரட்டி 'வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர்; ஆளுக்கு ஒரு செடி' என்ற கருத்தை முன்னிறுத்தி அடர் வனத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக மழை பொழியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தச் செடிகள் வளர்வதைப் பார்த்து அருகில் உள்ள கிராம இளைஞர்களுக்கும் மரம் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த அடர் வனம் பறவைகளின் இருப்பிடமாக மாறும். ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்று அடர்வனம் அமைப்பதன் மூலம் பசுமை திரும்பும்" என்றார்.

இதையும் படிங்க: விவேக் நினைவாக மரக்கன்று நட்ட நடிகை ஆத்மிகா!

Last Updated : May 21, 2021, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details