கோயம்புத்தூர்:மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தில் விவசாயி கோபால்சாமி என்பவர் தனது நிலத்திற்கான ஆவணங்களை சரிபார்க்க சென்றார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துச்சாமி ஆகியோருடன் கோபால்சாமிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபால்சாமி சாதிய ரீதியாக பட்டியல் இனத்தை சார்ந்த கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக காணொலி வெளியானது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து விவசாயி கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமியை சாதி ரீதியாக நடத்தியதாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த விவசாயி கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து முத்துசாமி புகாரின் பேரில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கோபால்சாமி தலைமறைவானர்.
முத்துச்சாமி ஆபாசமாக பேசியது அம்பலம்
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட காணொலி பதிவின் மற்றொரு பகுதி சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், வாக்குவாதத்தில் ஈடுபடும் கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆபாசமாக பேசி தாக்கும் காணொலி காட்சிகள் வெளியாகின.