கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள குட்டைக்கு வரும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் குட்டையைக் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் குட்டையானதுக் குப்பை மேடாக மாற்றியுள்ளது.
நாளடைவில், கிராம மக்களால் உருவான குப்பை மேடானது, கிராம மக்களுக்கே இடையூறாக இருந்ததினால், அவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பலர் இணைந்து, பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், குட்டையில் இருந்த குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.
மரப்பூங்கா: பின்னர், குட்டையை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என முடிவெடுத்த தன்னார்வலர்கள், கிராம மக்களின் உதவியுடன், மரப் பூங்காவை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரித்தும் வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பல்லுயிர் சூழல் மேம்பட்டதோடு, பசுமையான சூழலாகவும் உருவாகியுள்ளது.
பசுமை வனம்:கிராம மக்களின், மரப்பூங்கா உருவாக்கும் முயற்சி வெற்றி அடைந்ததால், மேலும் மூன்று மரப் பூங்காக்களை உருவாக்க நொய்யல் கிளை ஓடை மற்றும் மயான பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மேலும், மரம் வளர்ப்பதில் கிராம மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிறந்தநாள் மற்றும் இறந்த நாள் நினைவாக மரம் நடுதல் என்ற புதிய முயற்சியைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அப்பகுதியில் அதிக அளவிலான மரங்கள் நடவு செய்யப்பட்டு கிராம மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை மேடானது பசுமை நிறைந்த வனமாகக் காட்சியளிக்கிறது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலரும், இயற்கை விவசாயியுமான தங்கவேலு ஈடிவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது, "நீர் வழிப்பாதை இல்லாத குட்டையானதுக் குப்பை மேடாக இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் இணைந்து, குட்டையில் உள்ள குப்பைகளை வெளியேற்றி, மரங்களை நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி, அப்பகுதியில் பல வகையான மரங்களை நடவு செய்து வனத்தை உருவாக்கினோம்.