கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 10 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் கடை (கடை எண்:1567) அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, புதிதாக வரவுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக இன்று (மே 27) கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் ஆகியோர் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.
அதில், “விளாங்குறிச்சி பகுதியில் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இங்கு டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தின் அருகிலேயே, பேருந்து நிறுத்தம் இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலும் உண்டாகும். எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விளாங்குறிச்சி கிராமம் என்ற பெயரை மாற்றி ‘டாஸ்மாக் கிராமம்’ என கூறும் அளவிற்கு அங்கு மதுபானக் கடைகள் இருக்கின்றன’ எனக் கூறப்பட்டிருந்தது.
விளாங்குறிச்சி கிராமம் அல்ல.. இனி அது ‘டாஸ்மாக் கிராமம்’ - கோயம்புத்தூர் அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை! இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், “விளாங்குறிச்சி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி பொதுமக்கள் அதனை எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கெனவே கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் தொடர்ந்து கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட காவல் ஆணையரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு அளித்துள்ளோம். ஏற்கெனவே அந்த கிராமத்தில் 10 டாஸ்மாக் பார்கள் இருக்கின்றன. அதேநேரம் 3 மாநகராட்சி கவுன்சிலர்களின் இல்லமும் அங்குதான் உள்ளது. பார் உரிமையாளர்கள் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.
திமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்றாலும், நேர கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கூட போதுமானது. எனவே, விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!