கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த அவர், 'அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கட்சி நான்கு மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஏற்கெனவே ஆண்ட மாநிலங்களில் மீண்டும் ஆளும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. இது மகத்தான வெற்றி என பாஜகவினர் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தோல்வி
பிரதமர் அதனை இமாலய வெற்றி எனக்கூறுகிறார். இதை வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிவைச் சந்தித்துள்ளனர். எனவே, அது பாஜகவிற்கு சாதகம் எனக் கூற முடியாது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றாக சேராமல் போனதாலும் மத வெறுப்பு அரசியலை கடைபிடித்ததாலும் தான் இந்தத் தோல்வி ஏற்பட்டது.
'ஈகோ' பார்க்காமல் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் - திருமாவளவன் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு பற்றி பாஜக எதுவும் பேசவில்லை. அதற்கு மாறாக 'ஸ்ரீராமஜெயம்' என்று இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இந்தியாவைச் சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகளும் ஈகோ பார்க்காமல் ஒன்றாக இணைய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் சமூக நீதிக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைனால் பாஜக வெற்றி பெறக்கூடாது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும். மாநில அரசால் கூட இந்தச் சட்டம் இயற்ற முடியும் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
'ஈகோ' பாராமல் ஒன்றிணைய வேண்டும்!
கோகுல்ராஜ் கொலை வழக்குத் தீர்ப்பு என்பது ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்டும் என நினைக்கிறேன். உச்ச நீதிமன்றம் சாதி, மத மோதல்களைத் தடுக்க தனி உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும். நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவை விரட்ட வேண்டும். அதற்கு 'ஈகோ' பாராமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எந்தக் கட்சியில் தலைமை அமைய வேண்டும் என்பது முக்கியம் அல்ல. அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டமைப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உணர்த்துகின்றது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வளையோசை கலகலவென... படியில் தொங்கியபடி பயணம் செய்த எம்எல்ஏ!