கோயம்புத்தூர்:கரட்டுமேடு மருதாச்சல கோயிலில் அன்னதான கூடத்தில் பக்தர்களிடம் மரியாதையின்றி கடுமையாக நடந்து கொள்ளும் பெண் பணியாளர்களால் பக்தர்களின் மன அமைதி பாதிக்கப்படுவதாகக் கோயில் செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் கடந்த டிச.31ஆம் தேதி சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு ரத்தினகிரி மருதாச்சல கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் அன்னதானத்திற்காக கோயிலில் அமர்ந்து காத்திருந்துள்ளனர். அன்னதான கூடத்தில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
இதனால் அங்கிருந்த ஒருவர் அன்னதானம் செய்யுமாறு பணியாளர்களை அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் பாக்கியலட்சுமி, ரத்தினம் என்ற இரண்டு பெண் பணியாளர்கள் பக்தர்களுக்கு முறையாக உணவு பரிமாறாமல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அன்னதானம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் மறு சாப்பாடு கேட்டதற்கு அதெல்லாம் போட முடியாது என உணவு பரிமாறிய பணியாளர் பாக்கியலட்சுமி கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து சக பக்தர்கள் கேள்வி எழுப்புகையில் அவர்களிடமும் மரியாதையின்றி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் அன்னதான கூடத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.